புத்தக கண்காட்சி இனிதே முடிவடைந்தது. வழக்கம் போலவே மிதமாக சூடு பிடிக்க தொடங்கிய புத்தக திருவிழா கடைசி மூன்று நாட்கள் முச்சு முட்டும் அளவு கூட்டத்தை வாரி குவித்தது. ஒரு பதிப்பக ஊழியருடன் சாவகாசமாக உரையாடுகையில் கிடைத்த தகவலின்படி ஒவ்வொரு கடைக்கும் 4௦,௦௦௦ ரூபாய் வாடகையாக வசூலிக்கபட்டுள்ளது. முதலில் இது சற்றே மிகையாக தோன்றினாலும், இறுதியில் பன்னிரண்டு நாட்களில் ஏழு கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் கலை கட்டி உள்ளது கேள்வி பட்டு மிகைத்து தான் போனேன்.
இம்முறையும் என்னுடைய ஆர்வம் மருத்துவம், கவிதை, சிறுகதை, வரலாறு மற்றும் பொருளாதாரம் பக்கமே சுழன்று கொண்டு இருந்தது. நல்லவேளையாக இவ்வருடம் சுயமேம்பாட்டு புத்தகங்கள் இச்சுழலில் இருந்து விடுபட்டுக் கொண்டு விட்டது, ஒருவேளை மேம்படுத்திக் கொண்டுவிட்டனோ என்னவோ ;). புதினம், நாவல் படிப்பவர்கள் இப்பொழுதும் என்னுடைய பிரம்மிப்புக்கு உட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் என நண்பர்கள் சிபாரிசு செய்யும்போது தலையை ஆட்டினாலும் உள்ளுக்குள் ஏனோ வாங்க வேண்டும் என்ற அந்த உந்துதல் வரவே இல்லை.
வழக்கத்திற்கு மாறாக இம்முறை தமிழ் ஆர்வம் பொத்துக்கிட்டு வந்தது அதிசயமாக இருக்கிறது. நான் வாங்கிய புத்தகங்களில் பெரும்பாலானவை தமிழ் புத்தகங்கள். தமிழ் புத்தகங்களை முழு ஈடுபாட்டுடன் படித்திடும்போது கிடைத்திடும் ஒருவித சுவையான அனுபவம் பெரும்பாலான ஆங்கில புத்தகங்களில் எனக்கு கிடைப்பதில்லை. ஆழ்ந்து நோக்குகையில், நான் ஆங்கில புத்தகங்கள் படிப்பது என்னுடைய புலமையை வளர்ப்பதர்க்கேவன்றி வேறில்லை, சொல்லப்போனால் அதை ஒரு தொழிற் தேவையாகத்தான் நான் செய்தேனே தவிர மகிழ்ச்சியுற படித்ததே இல்லை என்றே தோன்றுகிறது (மொழி வல்லமையின்மை கூட ஒரு காரணமாக இருக்கலாம்), இவ்வலையூட்டமே கூட நான் என் ஆங்கில புலமையை வளர்த்துக் கொள்வதர்காகவே ஆரம்பிக்கப்பட்டதுதான். ஆங்கில புத்தகங்கள் மீதான என்னுடைய மோகம் காலப்போக்கில் நலிந்து விட்டதற்கான காரணத்தை உற்று நோக்குகையில் வலையூட்டங்களின்பால் இப்புலமையை வளர்க்க பெரிதும் வழிவகை யுண்டென்பதால் தான் இச்சிறு மாற்றம் என்பதை உணரமுடிகிறது.
எல்லாம் சரி, எதற்காக திடீர் என்று தமிழில் ஒரு வலைப்பதிவு என்று உங்களுக்கு தோன்றி இருக்கலாம். ஆங்கில புலமையை வளர்க்க அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் புலமையை எந்தளவு இழந்திருக்கிறோம் என்று அறிந்துக்கொள்ள எழுதப்பட்ட ஒரு சிறிய சுயபரிசோதனை தான் இவ்வலைப்பதிவு. என்னுடைய எழுத்துக்களில் யதார்த்தத்தை மீறிய ஒரு நாடகத்தன்மை (பழைய திரைப்படங்களில் வரும் வசனம் போல) இழையோடுவதை நான் இக்கட்டுரையை வரைகையிலேயே உணர முடிகிறது, ஆனால் தவிர்க்கத் தான் இயலவில்லை :).
Monday, January 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)

1 comments:
மிகவும் நன்றாக இருந்தது. பிழை இல்லாமல் ஒரு பதிவு....
/* தமிழ் புலமையை எந்தளவு இழந்திருக்கிறோம் என்று அறிந்துக்கொள்ள */
யதார்த்தமான உண்மை......!
/* யதார்த்தத்தை மீறிய ஒரு நாடகத்தன்மை */
பேச்சு வழக்கில் இல்லாததால் நாடகத்தன்மை போல் இருக்கிறது.
- டேவிட்
Post a Comment
Your feedback is highly appreciated. Thanks for reading and be proud you are grooming a writer ;)